Masjidhul Ihsaan - Coimbatore

உள்ளத்தை இறைவனுக்கு அற்பணிக்கும் தன்மையை உணர்த்தும் தியாகத் திருநாள்..!!

கோவை மாநகர ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை, கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று (செப்டம்பர் 24, 2015) 7.30 மணியளவில் நடைபெற்றது.


இந்த சிறப்பு தொழுகையை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளியின் இமாம் அப்துல் கபூர் அவர்கள் வழிநடத்தினார்.

கரும்புக்கடை ஹிதாயா பெண்கள் கல்லூரியின் தாளாளரும் ,மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் இமாமுமான, மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், பெருநாளை கொண்டாடும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் குடும்பம், குலம், இனம், மொழி, பண்பாட்டு மாச்சரியங்களால் கட்டுண்டு கிடப்பதை விடுத்து தங்கள் உள்ளத்தினை முழுவதுமாகவும் தனது மனயிச்சையை விட இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதே தனது முழுமுதல் நோக்காமாகவும், தனது வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அவனது கட்டளைக்கினங்கவே முன்னெடுக்கும் உளப்பூர்வமான வழிபாடுகளின் மூலம் நமது அந்தஸ்தினை இறைவன் உயர்த்துவான். எனவே, நபி இப்ராஹிம் அவர்களும் அவர்களது குடும்பத்தார் செய்த உன்னத தியாகத்தை நினவுகூருவதர்க்காக இன்றைய தியாகத் திருநாளைக் கொண்டாடும் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியினை பின்பற்றி தங்களது வாழ்க்கையினையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நம் இந்தியத் திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் கலவரங்களினாலும், பல்வேறு நாடுகளில் அகதிகளாக புலம்பெயரும் ரோஹிங்கியா, சிரியா, பாலஸ்தீன முஸ்லிம்களுக்கும் அவர்களைப்போலவே துயரத்தில் வாடும் மக்களின் துயர் நீங்க வேண்டியும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பெருநாள் தொழுகை நிகழ்வில் ஆண்கள் - பெண்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.